"ஒரு நூல் வாசகனை ஈர்க்க வேண்டும் என்றால் அதில் ஏராளமான வாழ்வியல் சம்பவக் கூறுகள் நிறைந்துகிடக்க வேண்டும். வெறும் கருத்தோட்டத்தை நம்பி மட்டுமே ஒரு நூலை ஆக்க முயன்றால், அந்த நூல் சில பக்கங்களிலேயே சலிப்பைத் தந்துவிடும். அதை நன்கு உணர்ந்திருக்கக்கூடிய தம்பி பி.கே.பழனிக்குமார், ஏராளமான சம்பவங்களை நூலுக்குள் மலைபோலக் குவித்து இந்த நூலைக் கட்டி எழுப்பி யுள்ளார்.
இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பே அதனுடைய எளிமையான நடை அழகும் அதற்குள் வளைந்து நெளிந்து ஓடும் சாதாரண சம்பவங்களுமே ஆகும். மதுரையின் மேலமாசி வீதியில் நின்று கொண்டு ஏதோ சாதித்த அனுபவசாலிப் பெரியவர் ஒருவர் அங்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்குச் சாதாரண மொழியில், சாமானியனின் பாணியில் பேசிப் பேசி சாதிக்கத் தூண்டுவதைப்போல தம்பி பழனிக்குமாரின் உவமானங்களும் உபகதைகளும் இதில் பகிரப்பட்டுள்ளன. தொழில் தொடங்கி தோற்றுப்போய் விழுகிற நிலையில் இருக்கக்கூடிய எவரொருவரையும் இந்த நூல் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோலாக இருக்கும்."
-தமிழச்சி தங்கபாண்டியன்