நீதிக்கும் அநீதிக்குமான இழுபறி, போராட்டம் மனித சமூகத்திற்குப் புதிதல்ல. இரண்டு காலில் நடக்க ஆரம்பித்த குரங்குகள் கூடி, சமூகமாகப் பரிணமித்த கணத்திலிருந்தே இந்தப் போராட்டம் தொடர்கதைதான். ஆனால் அதில் ஒவ்வொரு முறையும் அறம் மட்டுமே வென்று வந்திருக்கிறது என்றோ, வாய்மையே எப்போதும் வெல்லும் என்றோ யாராலும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. அதிலும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் நீதித்துறையின் இந்த அடித்தளமே ஆட்டம் கண்டு போயிருப்பதை நாம் கண்முன் கண்டு வருகிறோம். அப்படியிருப்பினும் எப்போதேனும் நீதி வெல்லும் சமயங்களில் நான் நினைவு கொள்வது ஜெயந்தனின் ‘உப்பு விலையும் நியாயாதிபதிகளும்' என்ற சிறுகதையைத்தான். நீதி அதைச் சுமந்து வருபவனின் தோள் வலியையும், அவனது தனிப்பட்ட அற வரையறைகளையும் பொறுத்து அமைகிறதே அன்றி, அறம் என்ற பொருண்மையின் தனிப்பட்ட வெற்றிகள் எதுவுமில்லை என்பதே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறுதியாகிறது. ஜெயந்தனைப் போன்ற கலைஞனின் சொற்பிரவாகம் அந்தத் தத்துவ விசாரணையைக் கல்லில் எழுத்தாக்கியிருக்கிறது.
யெஸ். பாலபாரதி
எழுத்தாளர்