திருத்தொண்டர் புகழை உலகறியச் செய்த மகான், திருவாளர் அமைச்சர் சேக்கிழார் பெருமான் ஆவர். பக்திச் சுவை மிகச் சொட்டச் சொட்ட, அறுபத்து மூவர் நாயன்மார்களின் வரலாற்றை, அழகிய பாக்களாக, 'பெரிய புராணம்' என்ற பெயரால், பன்னிரெண்டாம் திருமுறையாக, உலகுக்கு அப்பெருந்தொண்டர் வழங்கினார். “உலகெலாம்" என்று தொடங்கும் அந்த அழகிய தமிழ்க்காவியம், உண்மையான தொண்டின் சுயநலமற்ற சேவையின்-ஆக்க சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் அரும்பணியின் சிறப்பை, தீந்தமிழ் விருத்தப் பாக்களால் விரிவாக எடுத்துரைக்கின்றது.
சோழப் பேரரசின் முதலமைச்சராகப் பணிபுரிந்த சேக்கிழார் பெருமானின் புகழ் நிலைத்திருக்க, இந்தத் தமிழ்க் காவியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்றைய தினம் இந்த தமிழ்க் காவியத்தை செய்யுள் வடிவத்தில் படித்துப் பயன் பெறுபவர் மிகச் சிலரே. எனவே, இந்த அழகிய மகா காவியத்தைப் பாமரரும் அறியும் வகையில், எளிய நடையில், வசனரூபமாக, பிரேமா பிரசுராலயத்தார், ஓர் அழகிய நூலாக வெளியிட்டுள்ளனர். இந்தப் புதிய முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது.
இந்த வசன நூலில், அழகான ஓவியங்கள் கண்ணைக்கவரும் வகையில் காட்சியளிக்கின்றன. நமது பழம் பெரும் கோவில்களில் எல்லாம், "அறுபத்து மூவர்'" நாயன்மார்களின், சிலைகளைக் காணலாம். ஆனால், அவர்கள் எங்கே பிறந்தார்கள், என்ன செய்தார்கள், எதற்காக அவர்களை வணங்குகிறோம் என்ற விவரம் பக்தர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.அறுபத்து மூவர் உற்சவம், சென்னை மயிலாப்பூரிலும், மற்ற ஊர்களிலும், ஆண்டுதோறும், வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது, அனைவரும் அறிந்ததே. ஆயினும் அறுபத்து மூவர் சமுதாயத்திற்கு செய்த திருத்தொண்டையும் உண்மையான பக்தியையும் அறிந்து நடப்பவர் வெகு சிலரே.
"அரசாங்க நிர்வாகத்திலிருப்பவர் எழுத்தாளராக இருக்க முடியுமா?" என்று சிலர் சந்தேகப்படலாம் இந்த ஐயத்திற்கே இடமில்லை. ஏனெனில், சேக்கிழார் பெருமான், சோழப்பேரரசின் முதலமைச்சராய் இருந்தே "திருத்தொண்டர் புராணம்' பாடினார். அதேபோல, பாண்டிய நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தே மாணிக்க வாசகர், "திருவாசகம்" பாடினார்.