பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுதான் வாசிக்கப்பட வேண்டும் என்பதில்லை. சாமான்ய பின்புலத்திலிருந்து வந்து, அதுவும் படிப்பு சரியாக வரவில்லை என்று குட்டுப்பட்ட ஒரு மாணவர், பின்னாளில் தன் முயற்சியாலும், கட்டுக்கடங்காத ஆர்வத்தாலும் எப்படி இலக்கியம், தொழில், வரலாறு என்று மாறுபட்ட துறைகளிலும் நட்சத்திரமாக ஜொலித்தார் என்ற திரு.கிருஷ்ணன் போன்றோரின் வரலாறும் வாசிக்கப்பட வேண்டியது.
ம.கா.சிவஞானம்
ஆசிரியர், மல்லிகை மகள்
அறமாகிய நான் அறம் கிருஷ்ணின் அவர்களின் சுயசித்திரம் என்ற அளவில் மட்டும் இந்நூலை வகைப்படுத்தி விட முடியாது. இல்லறத்தை, இலக்கியத்தை, வர்த்தகத்தை என தனித்தனி அணுகு முறையை இவர் கையாண்டுள்ளார். எல்லாவற்றிலும் ஒரு அறத்தைப் பேணுகிறார். அவ்வகையில் இது ஒரு தன்னம்பிக்கையை பேசும் நூலாகவும் அணுகலாம். புறங்களின் சீண்டல் எதுவாயினும் அவைகளைப் புறந்தள்ளி தொடர்ந்து அறம் பெருக, வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
சம்பத். ஜி
தன் வாழ்க்கை தனக்குக் கற்றுக் கொடுத்ததையும், அதை தான் பெற்றுக் கொண்டதையும் காட்சிப் படிமங்களாக்கி, தன் எழுத்தால் நம்மை நூல் முழுவதும் கூடவே இழுத்துச் செல்கிறார். சின்னஞ்சிறு வயதில் தன் மண் நீங்கி, தாய்மடி பிரிந்து, தந்தையுடன் ஊர் கடக்கும் போது நம்மையும் கலங்கச் செய்கிறார். பள்ளிப் படிப்பில் விளையாட்டையும், கல்லூரி படிப்பில் தமிழையும் தழுவிக் கொள்கிறார்.
ப.செம்பரிதி