ஞான பீடப் பரிசுபெற்ற இந்திய எழுத்தாளர்கள் மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி ஆகியோரின் சிறுகதைகள், உலக இலக்கிய மேதை டால்ஸ்டாயின் குறுங்கதைகள், இவற்றோடு அஸ்ஸாமிய எழுத்தாளர் பிபுல் கடானியரின் ஒரு கதை எனப் பல மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் ஒரு தொகுப்பு நூலாக 'கவிஞனின் மனைவி' வெளியாகும் இத்தருணம் எனக்கு மகிழ்வும் நிறைவும் அளிக்கிறது.
விரிந்த பரப்புடன் இவர்கள் உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய நாவல்களுக்குச் சற்றும் சளைக்காத சிறப்புக்கொண்டிருப்பவை இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள்.
மின்னல் வெட்டுப் போன்ற சிறியதொரு தெறிப்பில் காலத்தால் அழியாத வாழ்வியல் உண்மைகளை தரிசனப்படுத்தும் கலைநயம் மிகுந்த ஆக்கங்கள் இவை.
-எம்.ஏ.சுசீலா